நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, April 10, 2014

சுடு.......வடு.

சுடு.......வடு.


மார்கழியுமல்ல
மாரிகாலமுமல்ல .....அது
மழை ஒய் காலம்

இடியோசையல்ல
இடைவிடாமல் கேட்பது
வெடியோசையே

மின்னி மின்னி மறைவது
மின்னலல்ல
பல் குழல் பீரங்கியின்
சுழல்கின்ற சன்னல்

வளைந்து
வானில் தெரிவது
போர்மேகம்செய்த புத்தம்புது
வெள்ளை வானவில்!

ஓடி ஒழிந்து ஒழிந்து
பார்க்கிறோம்
நாடி நரம்பெல்லாம்
கழைத்து விட்டது!

சன்னம் சுவைத்த
பின்னால்
உடலுக்கு உயிரே
சுமையாகியது!

தப்பியோடும் வேளையில்
உயிருக்கு உடல்
கனமாகத் தெரிந்தது!

ஒற்றைக்கையைப்பிடித்து
பற்றைகளுக்கிடையால்
ஓடிவந்த தமக்கையின்
பற்றுதல் பலமாக இருந்தது
ஓலமும் ஓங்கியது
திரும்பிப்பார்த்தேன்

குருதிக் கோட்டின்
முடிவில் சற்று முன்னர்தான்
உடலிலிருந்து பிரிந்த
அவளது இடது கால்
இழுபட்டுக்கொண்டிருந்தது!

கக்கத்தில் இருக்கின்ற
பச்சக்குழந்தையை கை
தானாக இறுக்கிற்று

எனை அறியாமல்
நான் வீரிட்டேன்
தள்ளாட்டத்தில் இருந்த
தாத்தாக்கள்தான்
எங்களை தாங்கினார்கள்!

விழித்திருந்தேன்
இலையான்கள் எங்கள்
இரத்தத்தை மிதித்து
அழுக்காகிக் கொண்டிருந்தன!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 april 1oth

போர்க்காலத்தில் அனுபவித்த துயரங்களை
என்னுடன் பகிர்ந்துகொண்ட ஒரு துணை நாடியின்
கதைன் ஒரு பகுதி இது.

0 கருத்துக்கள்:

Post a Comment