நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, April 23, 2014

கனியாத கனி





கிளையில் கனிந்த கனி நீ
காண்பதுண்டோ வாழை
குலையில் பழுத்து நீ இன்று
உண்பதுண்டோ?

அணிலுடன் பட்சிகள்
பட்டினி அவை காணுமுன்
இளங்காய்கள்
மரப்பெட்டியில்!

பிஞ்சுகள் ஆய்கிறார்
நஞ்செல்லாம் தெளிக்கின்றார்
பச்சைக்காயெல்லாம்
பொச்சென மாறுது நிறம்
பழம்போல தோணுது கணம் !

முதிர்ந்து கனிந்த கனி
இனித்து சுவைப்பது போல்
மருந்து அடித்த கனி
எந்தச் சுவையுமில்லை!

பழமல்ல நிஜத்திலது
பழநிறத்து
வெம்பலல்லோ
மணமில்லை மாங்கனியில்
குணமில்லை தீங்கனிகள்
இக்காலம் உண்மையல்லோ?

நரிகண்ட திராட்சை போல்
நான் உண்ட கனிகளெல்லாம்
நாக்கூசும் புளியேனோ
தீன் சுவையும் மறைந்ததேனோ?

பொல்லால் அடித்த பலா
கனி வருது
சொல்லால் சொல்கையில்தான்
அது சுவை தருது!

சொல்லி விற்கிறான்
சத்தியம் செய்கிறான்
சுவைப்பதன் பின்னால்
அவன் சத்தியம் பொய்க்கும்!

சோகைப் பிள்ளை போல
வெம்புக்கனி
சோபையில்ல உண்மையில்
அத நம்பு இனி!

நோயைகொடுக்குமோ
தெரியவில்லை
ஆனால் நிச்சயமாய் அது
உடலுக்கு நல்லமில்லை!

உலர் வைக்கோல் போருக்குள்ளே
முதிர் முதிரைக் கொத்துள்ளே
சுத்தி வைத்து பழுத்தது போல்
சுவையாக இருப்பதில்லை

மருந்து அடித்த கனி
என்றும் சுவையுமில்லை
விருந்தும் அதனாலே
திருப்தியில்லை!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 april 28

0 கருத்துக்கள்:

Post a Comment