நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, April 17, 2014

"வவ்வாலோடை முறித்தல்"

















"வவ்வாலோடை முறித்தல்"

வட்டை வடிச்சல் தண்ணி
மாரி மழைத்தண்ணி 
ஒன்றாய் சேர்ந்து 
ஊர்வலமாய் வந்து சேரும்!

சினைவச்ச மீன் போல
களப்பெல்லாம் நீர் நிரம்பி
கடலண்டை போய் நிற்கும்
தொடமுடியாமல் பரிதவிக்கும்!

ஏழெட்டு பேர் சேர்ந்து
மண்வெட்டி தனைக்கொண்டு
மண்வெட்டி எறிவார்கள்
இடைக்கோடு ஒன்று வரைவார்கள்!

கட்டி வைத்த கன்றுபோல
அத்துக்கொண்டு ஓடுமடா
தேங்கி நின்ற களப்புத்தண்ணி
காதலுடன் கலக்குமடா கடல் தண்ணி!

மருங்கெலாம் தாளையுடன்
அருகிவரும் கிண்ணை
மருந்துச் செடிகளுடன்
சில இடத்தில் இருக்கும் புன்னை!

மின்னிப்பற்றையுடன்
வெல்ல மரங்களெல்லாம்
தண்ணிக்கரையோரம்
கண்ணாவும் கடல் மாவும்!

அவளின் அழகுமேனி அளவுடன்
காட்டி மூடும் நாணல்
நேரான கோடல்ல இதன்
வடிவமோ ஒரு கோணல்!

ஆற்றோரம் கோரை வளர்ந்திருக்க
அதன் அருகே நாரை காத்திருக்கும்
அருகில் வரும் மீனுண்ண!

சேற்று மீனினமும் கருவண்டன்
இறாலினமும்
சினை வைத்து சேந்திருக்கும்
வலையில் பிடிபடக் காத்திருக்கும்!

வெள்ளம் குறைஞ்சவுடன்
துள்ளிக்குதிப்பாங்க
பள்ளிப்பிள்ளைகளும்
பலவயது ஆம்பிளையும்!

சள்ளல் செல்வநெல்லாம்
விழுந்தடிச்சி பிடிப்பாங்க
கயல் மீனைக் கண்வலையால்
கனதூரம் வீசிப்பிடிப்பாங்க!

சல்லு புல்லெல்லாம்
அத்தாங்கு அரித்தெடுக்கும்
முள்ளில் பட்டவலை
பொத்தலோடு திரும்பி வரும்!

உச்சி வெயிலுக்கு
பித்துப் பிடித்துப்போய்
கெளுத்தி எல்லாம்
உச்சந்தலை காட்டி
தெவங்கித் திரியும் !

கச்சை கட்டிக்கிட்டு
வீச்சு வேலையிலே மூள்கிருப்பார்
மூச்சுப் பிடித்துக்கொண்டு
நீர்மூழ்கி மீன் புடிப்பார்!

கொடுவா மீன் படும்
நடுவே சிலமீன் தப்பி ஓடும்!
படுவா என்று என்று சொலி
படும் பாம்பினை வைவார்கள்!

ஆழம் போக அஞ்சியவர்
கரையோரம் நிண்டு
கரண்டித்தண்ணிக்குள்ளே
குஞ்சி மீன் பிடித்து
குலத்த கருவறுப்பார்!

பழைய வீச்சுக்காரன்
பாடேடுத்து வைத்திருப்பான்
பதுங்கிப் போய் நின்று
பல கறிக்கி மீன் சேர்ப்பான்!

சிலுந்தல் திரளியுடன்
உழுவை மீன் பிடிப்பார்
திரும்பி போகையிலே
கறிக்குப்புளியாக
விப்பிளியங் காய் பறிப்பார்!

ஊரெல்லாம் பாலாணம்
மீன்பொரியல் மணக்கும்
கறி மணத்தில் நாவூறும்
நான் சொல்வேன் உனக்கும்!

நிந்தவூரில் தெற்குப்புறமாக ஒரு களப்பு இருக்கிறது இது "வவ்வாலோடை" என்று அழைக்கப்படும்.
அல்லிமூலை,நடுகுடி,பரவன் கண்ட வயல்களுக்கு பாய்ந்து வடியும் நீர் அல்லிமூலை ஆற்றினூடாக வடிந்து வந்து அட்டப்பள்ளத்தை காரையடி மடு எனும் இடத்தினூடாக ஊடறுத்து சென்று இந்தக்களப்பை உருவாக்குகின்றது. மழைகாலத்தில் நிந்தவூரின் தென்பகுதி வடிகால் நீரின் ஒருபகுதியும் இந்த களப்பை வந்தடைகின்றது. இதில் நீர் மட்டம் அதிகரிக்கும்போது வயல் நீர் வடியும் அளவு மந்தமாகும். வடிச்சலைத் துரிதப்படுத்த இவ்வாறான கலப்புக்களை தேவையேற்படும்போது தோண்டி விட்டு முகத்துவாரத்தை ஓடச்செய்வார்கள். முன்னர் மன்வெடடி கொண்டு முகத்துவாரம் வெட்டப்படும்.தற்போது பெக்கோ.கவுண்டி போன்ற இயந்திரங்களைக்கொண்டு தோண்டுகிறார்கள்.

வவ்வாலோடை களப்பை வெட்டி முகத்துவாரத்தை ஓடச்செய்யும் நிகழ்வு-"வவ்வாலோடை முறித்தல்" என்று அழைக்கப்படும்.இந்த நாள் நிந்தவூரின் தென்பகுதியில் ஆற்று மீன்கறி மணக்கும் ஒருநாள்.வவ்வலோடை களப்பு மீன் நிந்தவூர் மக்களிடம் அலாதி சுவையையும், பிரியத்தையும் உண்டு பண்ணியது.

விப்பிளியன்காய்-ஆற்றோரத்தில் ஒரு வகை வெளிர் பச்சை நிறமான கொடிகள் புதர்களில் படர்ந்திருக்கும் அதன் காய்கள் திராட்சைக்காய்களை ஒத்து இருக்கும்,இது தேங்காய்ப்பால் ஊற்றி ஆக்கும் பாலானத்துக்கு புளிப்புச்சுவை கொடுக்கும்.
இந்தக்காயை வெறுமனே சாப்பிட்டால் நாக்குக் கடிக்கும்.

0 கருத்துக்கள்:

Post a Comment