நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, April 22, 2014

வெறுங்கூடு!

வெறுங்கூடு!

காதலுடுடன்
கூடு கட்டி
கன்னிப்பெடை
கைபிடித்து !

ஆசையை கருவாக்கி
பூசைகள் பலசெய்து

ஒன்றன் பின் ஒன்றாக
பல குஞ்சு
நாங்கள் வைச்சோம்!

உண்ணக்கனி கொடுத்தோம்
உள்ளச்சுனை திறந்து
அள்ளிப் பருக விட்டோம்!

பள்ளிப்பருவத்தில்
படிக்காத ஆசானாய்
துள்ளித்திரிகையிலே
துணை நிற்கும் நண்பனாக
நாங்க நின்றோம்

துவண்டு விழுகையிலே
கொழுகொம்பாய் பணிசெய்து
அரண்டு மிரள்கையிலே
தைரியப் பானம் பருக்கி
உங்களை புடம்போட்டோம் !

இருட்டை வெளிச்சத்தால்
வறிதாக்கி
ஏழ்மையை கல்வியால்
விரட்டி
ஏணியில் நீங்கள் ஏறிச்செல்ல
எங்களையே
படியானோம்!

இப்போ
தள்ளாடுகிறது தேகம்
புகைகிறது பார்வை
எட்ட நின்று
எள்ளி நகையாடுகிறது
தூக்கம் !

மலம் சிக்கிக்கொண்டு
வழி மறித்து வம்பு செய்கிறது
முக்கினாலும் வழிவிடுகிதில்லை!
முகமும் விடியுதில்லை!

முக்கலும் முனகலும்
முந்தானை முடிச்சாக !

கன நாளாக ஆடிக்கொண்டிருந்த
கடவாய்ப்பல்லில்
எஞ்சிய ஒன்று
முந்தைநாள் ஒடியல்
ஒன்றுடன் போராடி
தோற்று வீழ்ந்து விட்டது!

சொல்லெலாம்
செல்லாக்காசாகி
செல்லவேண்டிய இடத்தை
போய்ச்சேராமல் வேறெங்கோ
சென்றுவிடுகின்றன!

பத்திரிகைச்செய்திகள்
புளித்துப்போய் விட்டன
புத்தி பேதலிக்கவில்லை
அழிந்துவிடவுமில்லை நினைவுகள்!

ஆனாலும்
இளைமைக்காலம்
இன்னும்
தெளிவாக உள்ள மனத்திரையில்
துல்லியமாகத் தெரிகிறது
அதனால்தான் அப்படியே
இறுகிப்போன
முகங்கள் அப்பப்போ
இளகிப்புன்னகைக்கின்றன!

ஒரு வளைந்த தடியே
எங்களை
விழுந்து விடாமல்
தாங்கிக் கொள்கின்றது
அதுவும் நாங்கள்
நடுங்கிக்கொண்டு
பிடிக்கும் வரைதான்!

வருடத்திலொருதடவை
விடுமுறைக்கு வரும்
உங்கள் குழந்தைகளுக்கு
நாங்கள் கிராமத்து
தாத்தாவும் பாட்டியும்
மட்டுமே!
எங்களிடம் அவர்கள்
நெருங்குவது
ராஜா ராணி கதைக்காகவே!

நாங்கள் அவர்களை
வாஞ்சையோடோடு தடவும்போது
எங்களது சுருங்கிய தோல்கள்
அவர்கள் பிஞ்சுக்கைகளால்
தடவப்படுவது அன்பினாலா
என்பது இன்றுவரை
புரியாத புதிராக இருக்கின்றது
ஏனெனில் அவர்களது ஸ்பரிசங்கள்
எங்களுக்கு அந்த உணர்வை
பிரதிபலிக்கவில்லை ஏனெனில்
நானும் அவளும் உணர்வுகளை
ஸ்பரிசங்களால்
ஒருவருக்கருவர் முழுதாக
மொழிபெயர்த்தவர்கள்

இப்போதெல்லாம்
எங்களுக்கு பலகாரம்
சுட முடியாது
எங்கள் நாவுக்கு
பலகாரமும் புரியாது!

அதிகாரம் செய்த நாங்கள்
இன்று ஆசீர்வாதம்
வழங்க மட்டுமே
நாங்கள் உங்களால்
இடம்பெயர்க்கப்பட்டத்தில்
ஒரே ஒரு மகிழ்ச்சி
ஆம் நீங்கள் எங்கள் சந்ததிகள்!

எத்தனை நாட்கள்
உங்களை கம்பளியால் போர்த்திவிட்டு
எங்களையே நாங்கள்
போர்வையாக்கி தூங்கியிருப்போம்?
ஆனால் கம்பளிதான் இன்று
நடுக்கங்களை துரத்துகின்ற
நாயகமாகி விட்டது!

கிளிகள் இருந்து
பறந்து சென்ற கூடு
நினைவுக்காற்றுகளால்
அசையுது

வெறுங்கூடு ஆடுது
மனமேடையில்
நினைவுகள் ஓடுது!

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 APRIL 22nd

0 கருத்துக்கள்:

Post a Comment