நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Saturday, April 26, 2014

மருதஞ் சோலை






மருதஞ் சோலை

நான் அப்போது
சிறுவன்
வாப்பா என்னை 
அந்த
நிழல் சோலையினூடாக
ஈருருளியில்
ஏற்றிச் செல்வர்!

உச்சிக்கு மேலே வந்து
எங்கள் தோல்களை
கருக்கிப் பொசுக்கிவிட
நெருப்பைக் கக்கி
ஒளியை உமிழ்கின்ற
ஆதவன்!

மேற்கு வயல்களினை
ஊடறுத்து களைத்து வரும்
காற்றுக்கூட
வியர்த்து விறுவிறுத்து
இந்த நிழலை வந்தடையும்
குளுமையை கடனுக்கு வாங்கி
தலையைச் சொறிந்துகொண்டு
சுற்றிச்சுற்றி நின்று கொஞ்சம்
இளைப்பாறிச்செல்லும்!

வழிப்போக்கர்
மண்வெட்டிப்போராளி
வெண்கட்டிப்போராளி
யாத்திரிகர்
இப்படி பல
ஆட்கள் வந்து
இந்த இதத்தை இரவலாக
சற்று அனுபவித்துச் செல்வார்கள்!

ஓரத்து வாய்க்கால்
ஓசையின்றி ஓட
புற்பாய் விரிந்து கிடக்கும்
அதற்கு ஒப்பாய்
எதுவுமேஇல்லை!

மருதம் பட்டை கழன்று
ஏதோ ஒரு
பலகாரம்போல
மருங்குகளில்
சிதறிக்கிடக்கும்

முதிர்ந்த கொட்டை விழுந்து
கடந்த மாரியில் எழுந்த
கன்றுகள் இன்னும்
ஈரிலைகளுடன்
ஈயென்று சிரிக்கும்!

உச்சாரக்கொப்பில்
முறிந்த பெருஞ்சுள்ளிகளால்
ஒழுங்கின்றி கட்டப்பட்ட
ஒரு பருந்துக்கூடு
அதில் அடை படுக்கும் பேடு!

மற்றக்கிளைகளிலோ
மரத்துக்கு திருஸ்டிப்பொட்டுப்போல
காற்றடித்தால் நடனமாடுகின்ற
தூக்கணாங்குருவிக்கூடு

காலம்துளைத்த பொந்துகளில்
கவலையின்றி குடும்பமாய் வாழும்
மதுரங்கிளிச்சோடி!

காற்றுக்கு ஒலியை
இரவல் கொடுக்கின்ற
முதிர்ந்த ஆனால்
உதிராத விரைவில்
சருகுகளாகப்போகின்ற
பளபளக்கும் பச்சயத்தகடுகள்!

எல்லாவற்றையும் மீறி
எனது பிஞ்சுக்கைகளால்
கட்டிப்பிடிக்க முயன்றும்
முடியாமல் போன
அந்த அடி பருத்த
இடைக்கிடை திமில்
காய்த்த
மருத மரங்கள் !

சிலிண்டர் வெடிப்பு நடந்த
மறுநாளே
மொட்டையடிக்கப்பட்டு
செம்புள்ளி கரும்புள்ளி
குத்தப்பட்டு
வெட்டி வீழ்த்தப்பட்டது
ஒரு சாகியம்
அழிந்த சரித்திரம்
காகிதத்தில் கூட
சிறு குறிப்பில்லை!

இதுதான்
என தேச வழமை
எய்தவனை விடுத்து
அம்பினை வைவார்கள்
யாரோ செய்த
குற்றத்துக்கு
எதுவுமறியாத மருதமரம்
ஏனிப்படி தண்டிக்கப்பட்டது!

இன்னும் முயல்கின்றோம்
ஒற்றைமதுரையை உருவாக்க
வித்தையாகவே தெரிகிறது
ஒரு சோலையை அல்லவா
அழித்தார்கள் சொற்ப வேளையில்?

அவர்கள்
தசாப்தங்களின் சரித்திரத்தை
வினாடிக்குள்
வீழ்த்திய கைகாரர்கள் !

உமர் அலி முகம்மதிஸ்மாயில்
2014 APRIL 26TH

0 கருத்துக்கள்:

Post a Comment