நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Tuesday, July 1, 2014

சகர் பாவா!



சகர் பாவா
...................
டும் டும் டும்
டும் டும் டும்
சகருக்கு நேரமாச்சு 
தீனோர்களே எழும்புங்க
நோம்பை பிடிங்க

டும் டும் டும்
டும் டும் டும்

சகர் எழுப்புற பாவா
சோளியப்போட்டுக்கிட்டு
ரபான தட்டிக்கிட்டு
ரோட்டு ரோட்டா போவார்!

ஒழுங்கைகள் ஓடிக்கடப்பார்
சந்திகளில் கொஞ்சம் தாமதிப்பார்
கையிலே பேணி விளக்குடன்
பையன் ஒருவனும் உடன் வருவான்!

பாவாவை பார்க்கவேண்டுமென்று
பலநாளாய் ஆசை
வாப்பாவிடம் சொல்லி வாய் எடுக்குமுன்
வெகுதூரம் போய்விடுவார்
சத்தமும் குறைந்து சென்று
அவர் தூரத்தில் என்பதை உறுதிப்படுத்தும்!

பாவாக்கு பயமில்லையா
பயப்பிடும் வயதில் நான்
வாப்பாவிடம் அடிக்கடி கேட்பேன்
இது மாதிரி பலகேள்விகள்
கேட்டாலும்
பாவாவை பார்க்கும் வரை
எனக்குள்ளே தொடர்ந்தும் வினா
இருக்கத்தான் செய்தது !

அப்பொழுதெல்லாம் பாவா
எனது கனவு வீரனானார்
அழுது புரண்டு வாப்பாவை
அடம்பிடிப்பேன் பாவாவை காணவென்று !

பிள்ளையின் தொல்லையும்
பிடிவாதத் தன்மையும்
வாப்பா - பாவா ஒப்பந்தம்
ஒன்றை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

வழமைக்கு மாறாக ஒரு சகர்நேரம்
அன்று எங்கள் வீட்டின் முன்னாள்
றபான் சத்தம் தொடர்ந்து கேட்டது
பின் ஓய்ந்தது .பின் கேட்டது
கிட்டத்தில் மிகக்கிட்டத்தில்!

வாப்பா என்னை எழுப்பினார்
நானும் கண்களைக் கசக்கினேன்
வாசல் கதவு திறந்திருக்க
பாவா கொட்டி நின்றிருந்தார்
எங்கள் வீட்டுப்படியோரம் !

தட்டித்தட்டி ஒலிஎழுப்ப
வட்டம் போட்டு நாங்க நின்றோம்
தட்டும் இசையை
கேட்டு நின்றோம்

வெள்ளைச்சட்டை நீளக்கையுடன்
வெள்ளை கோட்டுச் சாறன் உடுத்த்ருந்தார்
பலநிற கற்கள் மணிகளுடன்
மாலை கழுத்தில் பளபளக்க
பழுத்த தாடியும் முகத்தில் பொழு பொழுக்க
தலையில் தலைப்பா கட்டியிருந்தார்
மணிக்கட்டில் மணிகள்
விரலிலே வெள்ளி மோதிரங்கள் !

தோளில் ஒரு கருநிற சோழி
கையிலே ஒரு வெண்நிற நீள்தடி
கமகமண்டு மணக்குது
அவரிடம் நல்ல நைட் குயீன் அத்தறு!

றபானைத் தொடனும்போல்
எனக்குள்ள ஆசை எப்படிச்சொல்வது ?
ரபானையும் வாப்பாவையும்
மாறி மாறிப்பார்த்தேன்

வாப்பாக்கு புரிந்து பாவாவைப் பார்த்தார்
பாவாக்கு புரிய என்கையில் கொடுத்தார்
அதுபோல ஆனந்தம் இன்னமும் கிடைக்கல
அதமட்டும் என்னால மறக்கவும் முடியல !

தொட்டுப்பார்த்தேன் வழு வழுத்தது
தட்டிப்பார்த்தேன் சத்தம் போட்டது
பாவாவின் தட்டல் ஓசையாய் வந்தது
எந்தன் தட்டல் ஒலியைத் தந்தது

பட்டாசும் மத்தாப்பும்
மாறிமாறி வெடித்தது மனுசுக்குள்
இப்போதும் நினைப்பு கிஞ்சித்தும் குறையாமல்
பத்திரமாய் இருக்குது நெஞ்சுக்குள்!

ஒரு தேநீர் அருந்தும் இடைவெளியில்
எனது நீண்ட நாள் கனவு நனவானது
தானாக தூக்கம் தழுவிக்கொண்டது
கனவிலும் றபான் ஓசை கேட்டது !

ஓதப்பள்ளியில் ஒருவரும் விடாமல்
உரத்துச் சொன்னேன்
கொஞ்சம் மூக்கும் காதும் கொஞ்சம்
வைத்துச்சொன்னேன்

எனது நண்பர்களுக்குள் இரவில்
பாவாவைக் கண்ட முதல் ஆள்
நான் கதை சொல்ல அனைவரும்
ஆவென்று கதைகேட்க
நான்தான் அங்கு ஹீரோ
மற்றவர்களெல்லாம் என் முன் ஒரு சீரோ !

அன்று நாள் வெள்ளி நான்
செல்ல வேணும் பள்ளி
சகர் பாவா பகலிலே வந்தார்
வளவுக்குள் வரமுன் தந்தியடித்தார்
ரபானைத்தட்டி வந்ததைச் சொன்னார் !

சத்தம்கேட்ட உம்மா
அரைக்கொத்தரிசியும்
ஒத்தரூபாக் காசியும் தந்தா
ஓடிப்போய் கொடுத்தேன்
அதுக்குள்ளே ரபானில்
ஒரு அடியும் விட்டேன் !

சில நாள் பாவா வரவே மாட்டார்
என்னெண்டு கேட்டால்
பாவாக்கு ஈளையாம்
எழும்பி நடக்க ஏலாம
இழுத்துக்கிட்டு கிடக்காராம்

இதுதான் பிளைப்பாம்
இப்படித்தான் வாழ்வாராம்
பாவாக்கு இழுவை நோய்
பாவம் அவரு பழு தாங்க மாட்டார்
பக்கத்துவீட்டு பச்சைப் பிள்ளையை
பளு தூக்கச் செய்றார்!

பாவாவையும் காணல்ல
இப்ப பாப்பாவையும் காணல்ல
வீட்டுக்கு வீடு மணியொலிக்க
சகருக்கெழும்பி சமைக்கிறாங்க
சாப்பிட்டுபோட்டு தூங்குறாங்க!

காலையில் டியூசன்
கண்ணப்பொத்தி படுங்க
கதை கேக்கிற பிள்ளையை
அதட்டியும் விடுறாங்க !

மு.இ.உமர் அலி
1st july 2014
 — with Rijan MuhammadhRatha MariyaratnamRazana Manaf and 46 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment