நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Wednesday, July 9, 2014

காக்கா வெளவால்!

காக்கா வெளவால்!

உண்ணுவதையும்
கழிப்பதையும் ஒரே வழியால்
என்ன அழகாக செய்கிறது !

கண்ணு தெரியாவிடினும்
நம்மைப்போல என்றும்
கல்லில் மோதுவதில்லை
முள்ளில் ஏறி மிதிப்பதுமில்லை!

தலைகீழாகத் தொங்கினால்தான்
அதற்கு நேராகத்தெரியும்போல
அதுபோலத்தான் நம்மில் சிலரும்
தலைகீழாய் நடக்கின்றார்களோ?

பிறவிக் குருடாயிருந்தும்
இறக்கும் வரை பிச்சைஎடுக்காமலே
பறந்து திரிந்து பிழைக்கிறது
அதை பாராட்டாத்தான் வேண்டும்!

பழங்களை மட்டும் ஏப்பம் விடுவதற்காக
மோப்ப நாயைவிடவும் வினையமாக
மரங்களை எப்படித்தான்
அறிந்து கொள்ளுகின்றதோ தெரியவில்லை
ஆனால் அறிவியலில்
அது ஒரு அற்புதப்பஞ்சாங்கம்!

நல்ல கம்பளியால் இறைவன்
போர்த்துவிட்டிருப்பதால்
தொல்லையில்லாமல்
எந்தக்குளிரிலும்
தொங்கிக்கொண்டிருக்கிறது!

கும்பகர்ணனின் குடிலிலே
கூடவிருந்து இதன்
மூதாதையர்கள்
நிஷ்டை செய்திருப்பார்களோ!

ஆந்தையும் இவையும் அடிக்கடி
அந்தரத்தில் சந்தித்து குசலம் விசாரிப்பதை
கண்டவர்கள் சொன்னார்கள்
அப்படி என்னதான் பேசிக்கொள்வார்களோ?!

தொட்டுப்பார்த்தால் மெத்தென்றிருக்கும்
வெல்வெட்டுப்பிராணி
நம் அம்மாக்கள்போல
தாலாட்டுப்பாடாவிடினும்
தானாடிக்கொண்டு முலைப்பாலூட்டும்!

நில்லென்றால் நிற்குதில்லை
சொல்லுக்கேட்காமல் விர்ரென்று பறக்குது
நான் அதன் நண்பனில்லை
என்று நினைத்திருக்கலாம்
நியாயமும்தானே!

இரவே இதன் ராஜ்ஜியம்
இருளே இங்கு தர்பார்
இதனால்தான் அணில்களுக்கும்
குயில்களுக்கும்
குழப்பமே இல்லை
அவற்றுக்குமட்டுமல்ல
மரம் வளர்த்த தோட்டக்காரனுக்கும்
கொஞ்சம் வைத்துவிட்டுத்தான்
சப்பித்துப்புகிறது!

இவை சூரியனை வழியனுப்பிவிட்டு
திரும்பி வரும்போது
சந்திரனையுமல்லவா
கையுடன் கூட்டி வருகின்றது !

எத்தனையோ தடைகளில் படாமல்
பறந்து சென்று
தத்தித்தாவி வித்தை செய்த
காக்கா வெளவால்
கரண்டுக்கம்பியில் சாகசம் செய்யப்போய்
எதிர்பாராமல்
உயிர்விட்டது கவலையாகத்தான் இருக்கு!

யாரும் பிடிக்க முடியாத அது
செத்து அழுகி கீழ விழுந்த பின்பு
கம்பெடுத்து அடிக்கிறோம் புரட்டி
குத்தி குடைஞ்சி
பரிசோதனை செய்கிறோம்
முலைகளையும் அழைகிறோம்
அது பெண்ணாக இருக்கும்போது
சிலவேளை காறியும் துப்புகிறோம்
கால்களால் மிதிக்கிறோம்!

கேவலம் வெளவாலா நாமா?

மு.இ.உமர் அலி
2014 july 9
 — with றாபியின் கிறுக்கல்கள்.Meera MahroofMm.mohamed Kamil and 41 others.
LikeLike ·  · Stop Notifications · Share

0 கருத்துக்கள்:

Post a Comment