நலிந்து மெலிந்து இன்றோ நாளையோ என நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் கிராமங்களின் நினைவுகளை, கிராமங்களின் சுவடுகளை கவிதையாக சேகரித்து ஏட்டிலே இலக்கியத்தால் என்றென்றும் வாழவைக்க எடுக்கப்படும் ஒரு முயற்சி....

Thursday, July 17, 2014

கதறும் கடல்



கதறும் கடல்

எங்கு ஆரம்பமானது என்று
அந்தக்கடலுக்கு
தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை
இருந்தாலும்
அது தன்னுள்ளே ஒரு மைதானத்தை
தயாரித்துக்கொண்டு
தானாக ஓடிக்கொண்டுதான் இருக்கிறது!

எதுவரை ஓடுகின்றது என்பதை
இதுவரை யாரும் கூறவில்லை!
கூறினாலும்
அது நிற்கப்போவதுமில்லை

ஆரம்பம் இல்லாவிடினும்
அழகிய அருகு இருக்கிறது
அளவே இல்லாத வளங்களும்
நிறைந்திருக்கிறது !

அது ஒரு ஆழமறிய முடியாத
அமிழ்ந்துபோன
சாம்ராச்சியம்
அங்கு நண்டு முதல் திமிங்கிலம்
வரை ராசாதான்!

பூமிக்கு நீர்ப்பிச்சை கொடுக்கும்
வள்ளல்
நாம் குப்பை கொட்டும்
மிகப்பெரிய
குப்பைக்கூடை!

வானத்தின் நிறத்தை அது
இரவல் வாங்கியதா
இல்லை அதன் நிறம்தான்
வானத்தில் பிரதிபலிக்கிறதா
யார்யாரோ ஏதோ சொன்னாலும்
உண்மை எதுவென்று
சர்ச்சை இன்னும் தொடர்கிறது!

நாம் அனைவரும் அந்த நிறத்தையும்
உப்புச்சுவையையும்
மாற்றப்பார்க்கிறோம்
அதன் குடிமக்களை கொன்று குவிக்கிறோம்
கடலின் வேரறுத்து
பூமியில் வேலிகட்டுகிறோம் !

நல்லவேளை அதிலிருந்து
உப்பை மட்டும்தான் அதிகம் பெறலாம்
இன்றேல் இதுவரை
விஞ்ஜானம் அதை குடித்துத்தீர்த்துவிட்டு வேறோர்
கிரகத்துக்கு
குழாய் இணைப்புச்செய்திருக்கும்!

நவீனம்
கொட்டித்தீர்த்த கழிவுகள்
அதன் அதிசய முகங்களை
அலங்கோலப் படுத்திவிட்டன

நேற்று நான் கடற்கரைக்குப் போயிருந்தேன்
அலை என்ற வடிவத்தில்
திரும்பத்திரும்ப
என்னை துரத்திவந்து
என்கால்களில் விழுந்து அழுதது
அலை என்ற வடிவத்தில்!

கெஞ்சுகிறேன் மனிதா
எனை தயவுசெய்து
கற்பழிக்காதே
நான் கன்னியாக
இருக்கவே விரும்புகிறேன்
உனது சனத்திடம் கூறு என்றது!

மு.இ.உமர் அலி
நிந்தவூர் - 2014 July 17

0 கருத்துக்கள்:

Post a Comment